இஸ்ரேல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் மீண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆறு மாதங்கள் கழிந்து இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.17) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான 95 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், பிரதமர் நெதன்யாகு தலைமையிலான ஆளும் லிக்குட் கட்சி 32 இடங்களைப் பெற்று பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும், அரபு இஸ்ரேல் கட்சிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் லிஸ்ட் கட்சி 12 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும், மதப் பழமைவாத கட்சியான ஷாஸ் 9 இடங்கள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளன.
120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 61 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் ஆட்சியமைக்கலாம். ஆனால், பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு 55 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சியுடன் கூட்டணி
இதனால், அந்தரத்தில் மிதக்கும் தன் ஆட்சியைக் காப்பாற்ற பிரதமர் நெதன்யாகு, வேறுவழியின்றி ப்ளூ அண்ட ஒயிட் கட்சியுடன் கூட்டணி அமைக்க அக்கட்சியை தலைமை தாங்கும் பென்னி கான்ட்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று வெளியான வீடியோ ஒன்றில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், "இடதுசாரி ஆட்சி அமைக்கும் எனது திட்டம் தோல்வியில் முடிந்தது வருத்தமாக உள்ளது. ஆகவே, இஸ்ரேலுக்கு பிடித்தமான ஒரு பெருங்கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளேன்.
பென்னி, நாம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும். நாம் இருவரும் ஒத்துழைப்புடன், பொறுப்புடன் செயல்படுவதையே இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்று அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பென்னி கான்ட்ஸ், "என் தலைமையிலான ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது....நேர்மையான, தேசபக்திமிக்க,பொறுப்பான கட்சிகளுடன் ஆட்சியமைக்கத் தயார். தாராளவாத பெருங்கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்" என நெதன்யாகுவின் அழைப்பை உதறித்தள்ளினார்.
இது தனக்கு 'அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும்' அமைந்துள்ளது என பிரதமர் நெதன்யாகு வருத்தும் தெரிவித்துள்ளார்.
வாழ்வா சாவா நிலைமையில் நெதன்யாகு
பிரதமர் நெதன்யாகு மீது ஊழல், மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒருவேளை அவர் ஆட்சியமைக்க முடியாமல் போனால், இந்த வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்.இதனால், அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். இஸ்ரேலில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.