காஸா:இஸ்ரேலிய அரசு காஷா மீது கடந்த சில நாட்களாக ராக்கெட் தாக்குதலை நடத்திவருகிறது. நேற்று(மே 15) அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் ஆகிய ஊடக நிறுவனங்கள் இயங்கி வந்த கட்டடத்தின் மீது இஸ்ரேல் அரசு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டதால், அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா ஆகிய ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்புடன் வெளியேறினர். மூன்று ஏவுகணைகள் அந்தக்கட்டடத்தை தாக்கியதில், 12 மாடிக்கட்டடம் சரிந்து விழுந்தது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் மிக மூத்த தலைவர்கள் வசித்துவந்த வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸா பகுதியில் இயங்கி வரும் ஆயுதக்குழுக்களில் வலிமையானதும் மிகப்பெரியதுமான ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் அல்- ஹயேவின் வீட்டின் மீதும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியபின்னரும் அல்-ஹயேவின் நிலைகுறித்து உடனடியாக அறியமுடியவில்லை.
அசோசியேட்டட் பிரஸ் அலுவலகம் இயங்கிய மாடிக்கட்டடம் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் இயக்கத்திற்கிடையேயான ராக்கெட் தாக்குதலை படம்பிடிப்பதில் முக்கிய இடமாக இருந்தது. 2009, 2014ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களை இந்த ஊடகங்கள் காட்சிப்படுத்தின. மேலும், கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் தாக்குதல்களை அசோசியேட்டட் பிரஸ் ஊடகம் நேரலை செய்தது.
இத்தாக்குதலுக்குப் பின் காஸாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் குறைந்தளவே அறியமுடியும் எனவும், அசோசியேட்டட் பிரஸ், காஸாவில் செயல்பட்டுவந்த இதர ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ கேரி ப்ரூட் தெரிவித்துள்ளார்.