இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே, பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் அந்நாட்டு அதிபர் மைத்திரிபாலா சிறிசேன தடை விதித்தார். மேலும், இந்தத் தாக்குதலின் எதிரொலியாக பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்ட பயங்கரவாதிகளை ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி வாழ்த்தி பேசும் வீடியோ பதிவு ஒன்றை இந்த அமைப்பின் அல் ஃபா்குன் ஊடகம் வெளியிட்டுள்ளது.