கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் கதிகலங்கி நிற்கின்றன. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், கரோனா தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திவருகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஈரான் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருகட்டமாக சிறைகளில் உள்ள ஒரு லட்சம் சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க முடிவெடுத்துள்ளது.
இந்தத் தகவலை ஈரான் நீதித் துறையின் செய்தித்தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெய்லி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, கரோனா பாதிப்பையடுத்து மார்ச் முதல் வாரத்தில் 54 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா, இத்தாலி, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பால் ஈரான் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இங்கு 38,300 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,640 பேர் உயிரிழந்துள்ளனர். 12,000 பேர் கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: கிராமங்களை காப்பதே, நாட்டின் வெற்றி!