ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்ல இருந்த போயிங் 737 பயணிகள் விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கப் படைகளைத் தாக்குவதற்கு ஈரான் அனுப்பிய ஏவுகணைகளில் ஒன்றே இந்த விமானத்தைத் தாக்கியதாக நம்பப்படுவதாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டின. இதை திட்டவட்டமாக மறுத்த ஈரான், தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.மேலும், இது தற்செயலாக நடந்த விபத்து என்றும் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவுடனான அந்நாட்டின் மோதலை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றநிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த உத்தரவின்பேரில், அந்நாடு ஜனவரி 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.