இது தொடர்பாக அந்நாட்டின் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீயே கூறுகையில், “ 20 விழுக்காடு யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் ஈரான் அரசின் அணு உலையில் 20 விழுக்காடு யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்க ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 விழுக்காடு யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணித்துவரும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் இதனை உறுதி செய்துள்ளது. 20% செறிவூட்டல் என்பது ஆயுத-தர மட்டங்களிலிருந்து மாறுபட்ட ஒரு குறுகிய, தொழில்நுட்ப படிநிலை முன்னேற்றம் என ஈரான் கருதுகிறது” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை 2015ஆம் ஆண்டு ஈரான் செய்துகொண்டது. அணு ஆற்றலுக்கு எரிபொருளாக பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 3.67 விழுக்காட்டுக்கு மேல் செறிவூட்டக்கூடாது என்றும் குறிப்பிட்ட அளவே அதனை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.