ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 கோடி.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஜன. 3ஆம் தேதி அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த அதிரடி தாக்குதலில் ஈரான் தளபதி கொல்லப்பட்டது, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் தலைமைப் பொறுப்புடன் மிக நெருக்கமான நபராகத் திகழ்ந்த சுலைமானிக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தனது நாட்டின் போர் நாயகனாகத் திகழ்ந்த தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு சரியான பதிலடி தருவோம் எனவும் ஈரான் அரசு அறைகூவல் விடுத்தது.