ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை, அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் கொலை செய்ததும் அதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 28) ஈரானின் துணை ராணுவ புரட்சிகர காவல்படை ஹெலிகாப்டரிலிருந்து அமெரிக்க விமான கேரியரை இலக்கு வைத்து ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதல் நடத்திய காணொலி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது வெளியான தகவலில் ஈரான் அரசு போலியான அமெரிக்க விமான கேரியர் மீது தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க அரசு வழக்கமாக, வளைகுடாவில் பயணிக்கு விமான கேரியர் கப்பல் போலவே போலியான கப்பல் ஒன்றை ஈரான் அரசு வடிவமைத்தது மட்டுமின்றி இருபுறமும் போலி போர் விமானங்களை நிறுத்தி பயிற்சி மேற்கொண்டது. இந்தப் பயிற்சியானது ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் போலி கப்பலை சுற்றிவளைத்து சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி கப்பலில் இருந்த போலி விமானங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இது குறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், "இந்தப் பயிற்சியானது ஐக்கிய அரபு அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க வழி வகுத்துள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. அமெரிக்காவிற்கு சொந்தமான இரு தளங்களும், ஈரான் போலி விமான கேரியர் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தது" என்றார்.