காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆஃப்கனின் முன்னாள் அரசு அலுவலர்கள் சிலரின் மின்னஞ்சல் கணக்குகளை தாலிபன்கள் முடக்க முயன்றதை அடுத்து, ஆப்கன் அரசின் மின்னஞ்சல் கணக்குகள் சிலவற்றையும், சில அலுவலர்களின் மின்னஞ்சல் கணக்குகளையும்கூகுள் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இது குறித்து முன்னதாககூகுள் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "சில முக்கிய கணக்குகளைப் பாதுப்பதற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பின்மை தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, இந்தத் தற்காலிக நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் முன்னாள் அரசு ஊழியர்கள்
இந்நிலையில், இந்தக் கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாகவும், தாலிபான்களுக்கு துணைபோகும் முன்னாள் அரசு அலுவலர்களைக் கண்டறியவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களுக்கு ஒத்துழைக்காத முன்னாள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் பழிவாங்கப்படும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.