கோவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் மிகவும் பிஸியான விமான நிலையமாகத் திகழ்ந்த துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது.
இந்நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அடுத்த வாரம் முதல் தனது சேவையைப் படிப்படியாகத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து துபாய் சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குநர் பால் கிரிஃபித்ஸ் கூறுகையில், "இதுவரை அதிகப்படியான பயணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கக் கூடிய ஒரு சோதனைக் கருவி கண்டுபிடிக்கப்படவில்லை.
கரோனா தொற்றுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை விமானப் போக்குவரத்து குறைவாகவே இருக்கும். இயல்பு நிலை மீண்டும் திரும்ப 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இவை எல்லாம் அனுமானம்தான். யாருக்கும் இவை எப்போது முடியும் என்று உறுதியாகத் தெரியாது" என்றார்.
2019ஆம் ஆண்டு மட்டும் 86.4 மில்லியன் பயணிகள் துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், துபாய் விமான நிலையத்தில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்து 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இப்போது விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தாலும், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களின் சேவை தொடர்கிறது.