ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாம்பழ சட்னியுடன் கூடிய சைவ சமோசாக்களின் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.
அதில், 'நான் சமைத்த சமோசாக்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வாரம் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் மோடியுடன் பேசும் போது, இதனைப் பகிர்ந்து கொள்வேன்' எனக் கூறியிருந்தார். இதற்கு, பிரதமர் மோடியும் தன் பங்கிற்கு சுவாரஸ்யமாகப் பதிலளித்திருந்தார். இரு நாட்டுத் தலைவர்களின் பதிவுகள் நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் இன்று வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் உரையாடிய போது, சமோசா பேச்சும் இடம்பெற்றிருந்தது. அப்போது மோரிசன், 'மோடியின் புகழ்பெற்ற ஆரத்தழுவலுக்காகவும்; என்னுடைய சமோசாக்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தியாவுக்கு வருகிறேன். அடுத்த முறை 'குஜராத் கிச்சடி' உங்களுக்குத் தருகிறேன். உங்களை நேரில் சந்திப்பதற்கு முன்னர், குஜராத் கிச்சடியைத் தயாரிக்க பழகுகிறேன்' எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, 'குஜராத் மக்கள் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். கிச்சடியை நாடு முழுவதும் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர் இருக்கலாம்' எனச் சுட்டிக்காட்டினார்.