ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை காரணம்காட்டி ஈராக் பிரதமர் அப்தல் அப்துல் மஹ்திக்கு எதிராக அந்நாட்டுத் தலைநகர் பாக்தாத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், பெல்லட் குண்டுகளை வீசும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதில், இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும், 40 பாதுகாப்புப் படையினர் உட்பட 286 பேர் காயமடைந்ததாகவும் ஈராக் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த ஈராக் உள்துறை அமைச்சகம், "நடைபெற்ற வன்முறைக்கு சில போராட்டக்காரர்களே காரணம். இதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
போராட்டத்தின் போது முன்னாள் ஈராக் பயங்கரவாத தடுப்புப் படை தலைவர் அப்துல்வஹாப் அல்-சாதிக்கின் புகைப்படத்தைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஈராக்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பெரும்பங்காற்றிய அல்-சாதிக்குக்கு அந்நாட்டு மக்கள் இடையே பெரும் செல்வாக்கு உள்ளது.
இதனிடையே, போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்த ஐநா, அனைத்து தரப்பினரும் அமைதியைக் கையாளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க : எகிப்து அதிபர் சிசி-க்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள்