குவைத் நாட்டிலுள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது கரோனா பெருந்தொற்று, கச்சா எண்ணெயின் வீழ்ச்சி உள்ளிட்டவை வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்துள்ளன. கடந்த மாதத்தில் குவைத்தின் பிரதமர் ஷேக் சபாக் அல் காலித் அல் சபாக், குவைத்திலுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கையை 70 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், குவைத் நாடாளுமன்றம் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவானது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குவைத் நாட்டு மக்கள்தொகையில் 15 விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.