கீவ்:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அந்த வகையில் நேற்று(மார்ச். 4) சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு செய்திகளில், சபோரிஷியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பிடித்துள்ளது. இந்த உலையில் ஆயிரக்கணக்கான டன் அளவில் அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன.
இது ஐரோப்பா கண்டத்திற்கு மிகப்பெரிய கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலைய தாக்குதல் உலகலாவிய பீதியைத் தூண்டிவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களின் கண்டனங்களை பெற்றுவருகிறது. அண்மை தகவலாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பு தெரிவிக்கையில், சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் நோக்கம் ரஷ்ய படைகளுக்கு கிடையாது. மார்ச் 4ஆம் தேதி ரஷ்ய படை வீரர்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கவே ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனிடையே அந்த நாசக்கார குழு அணுமின் நிலையத்தில் தீயைகொளுத்திவிட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. அணுமின் நிலையத்திலிருந்து எந்த விதமான கதிரியக்கமும் வெளியாகவில்லை. தற்போது அணுமின் நிலையம் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வாதிட்டுள்ளது. இப்படி சபோரிஷியா அணுமின் நிலையம் தாக்கப்பட்டத்தில் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை மிகுந்த கவலையில் உள்ளது. காரணம் என்னவென்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது, ஒரு கண்டத்தையே அழிக்கும் அணுகுண்டுக்கு தேவையான புளூட்டோனியம் உள்ள ஒரு அணுமின் நிலையம் தாக்கப்படும்போது அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் தப்பியோட மட்டுமே எண்ணுவார்கள்.