தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

யாருக்கு? எப்போது? எப்படி? - ஃபைஸரின் கரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து தகவல்கள் - பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து

லண்டன் : நான்கு கோடி கரோனா தடுப்பு மருந்து டோஸ்களுக்கு பிரிட்டன் ஆர்டர் அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து இரண்டு டோஸ்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதால் இதன் மூலம் இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பு மருந்தை அளிக்க முடியும். தடுப்பு மருந்தை விநியோகிக்க இதற்கென தனியொரு கண்காணிப்பு அமைப்பை பிரிட்டன் அரசு உருவாக்கியுள்ளது.

Pfizer and Germany's BioNTech
Pfizer and Germany's BioNTech

By

Published : Dec 3, 2020, 3:19 PM IST

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனும், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன் அரசு (நவ.02) அனுமதி அளத்திருந்தது.

மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு வரை பலனளிப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தடுப்பு மருந்து விநியோகத் திட்டமாகக் கருதப்படும் இத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிய உலகமே பிரிட்டனை உற்று நோக்கி காத்துள்ளது.

பிரிட்டனிடம் தற்போது தேவையான அளவு தடுப்பு மருந்து உள்ளதா?

நிச்சயமாக இல்லை. நான்கு கோடி கரோனா தடுப்பு மருந்து டோஸ்களுக்கு பிரிட்டன் ஆர்டர் அளித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து இரண்டு டோஸ்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதால் இதன் மூலம் இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பு மருந்தை அளிக்க முடியும்.

பிரிட்டன் அரசு, 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு மருந்தை அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மீதியுள்ள 5.3 கோடி பேருக்கு மற்ற நிறுவனங்களின் தடுப்பு மருந்தை பிரிட்டன் அளிக்க வேண்டும்.

தடுப்பு மருந்து அளிக்கும் பணி எப்போது தொடங்கப்படும்?

தடுப்பு மருந்தின் முதல் தொகுப்பு அடுத்த சில நாள்களில் பெல்ஜியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் எட்டு லட்சம் டோஸ்களும், அதைத்தொடர்ந்து வரும் வாரங்களில் மேலும் சில லட்சம் டோஸ்களும் வரும் என்று பிரிட்டன் சுகாதார செயலர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு செயல்படுத்தப்படும்?

இந்தப் பணி மிகவும் எளிமையான ஒன்றாக இருக்காது. தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இதனால் விநியோகத்தில் கண்டிப்பாக மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டும்.

இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தத் தடுப்பு மருந்து சாதாரண குளிர்சாதன பெட்டியில் இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சில நாள்கள் சேமிக்கலாம். கடைசிகட்ட விநியோகச் சங்கிலியை எளிமையாக்க இது உதவும்.

இந்தப் பணி எவ்வளவு காலம் நீடிக்கும்?

குறைந்தபட்சம் சில மாதங்களாவது ஆகும். பிரிட்டனிடம் போதிய அளவு ஃபைஸர் தடுப்பு மருந்து இல்லை. இதனால் அனைவருக்கும் பிரிட்டனுக்கு பிற தடுப்பு மருந்துகளும் தேவைப்படும்.

எனவே, மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்தையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தடுப்பு மருந்தையும் பிரிட்டன் அரசு பரிசீலனை செய்துவருகிறது. ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தின் சுமார் 10 கோடி டோஸ்களை பிரிட்டன் ஆர்டர் செய்துள்ளது.

தடுப்பு மருந்து கட்டாயமா?

இல்லை. அவரவர் விருப்பப்படி தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசுவலியுறுத்துகிறது. இந்தத் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் கரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

தடுப்பு மருந்து முதலில் யாருக்கு வழங்கப்படும்?

மிகவும் ஆபத்தானவர்களுக்கே தடுப்பு மருந்து முதலில் வழங்கப்படும். கரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பவர்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, வயதானவர்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்குமே முன்னுரிமை அளிக்கப்படும்.

அடுத்தகட்டத் திட்டம் என்ன?

80 வயதைக் கடந்தவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 70 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்படும்.

முதல்கட்டத்தில் அதிக ஆபத்தான 90 முதல் 99 விழுக்காட்டினருக்கு தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று பிரிட்டன் அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இதுதான் இறுதித் திட்டமா?

இல்லை. தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் என்பது நெகிழ்வுதன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே பிரிட்டனின் கருத்து. எனவே, அவ்வப்போது இருக்கும் நிலையைப் பொருத்து திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.

இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்ட பின் எதிர்ப்பு சக்தி உருவாக எவ்வளவு காலம் பிடிக்கும்?

முதல்கட்ட எதிர்ப்பு சக்தி முதல் டோஸ் எடுத்துக்கொண்ட சில நாள்களிலேயே உருவாகத் தொடங்கும். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட ஏழு நாள்களுக்குப் பின் எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகும். மொத்தத்தில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டதில் இருந்து ஒரு மாதத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

நீண்ட காலத் திட்டம் என்ன?

தடுப்பு மருந்து எத்தனைக் காலம் பலனளிக்கும் என்பது போன்ற தகவல்கள் வரும் காலங்களில்தான் தெரியவரும். எனவே, இந்தத் தடுப்பு மருந்தை ஆண்டுதோறும் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது ஒரு முறை எடுத்துக்கொண்டால் போதுமா போன்ற தகவல்கள் வரும் நாள்களிலேயே தெரியவரும்.

மேலும், தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு உருவாகும் பக்க விளைவுகள் குறித்த தகவல்களை சேகரிக்க இதற்கென தனியாக ஒரு கண்காணிப்பு மையத்தையும் அரசு அமைத்துள்ளது.

இதையும் படிங்க:'மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து' - ரஷ்யா அதிபர்

ABOUT THE AUTHOR

...view details