தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு - கரோனாவை அழிக்கும் வழி

ஜெனீவா: கோவிட்-19 தொற்று என்பது உலகில் நிரந்தரமாக இருந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

WHO
WHO

By

Published : May 14, 2020, 11:11 AM IST

கோவிட்-19 தொற்று சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. குறிப்பாக உலக சுகாதார அமைப்பு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைகளுக்கான தலைவர் மைக்கேல் ரியான், இந்தக் கரோனா தொற்று என்பது இங்கேயே நிரந்தரமாக இருந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்தத் தொற்று எப்போது முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்பதை அறுதியாகக் கூற முடியாது.

இந்தக் கரோனா தொற்று என்பது இங்கேயே நிரந்தரமாக இருந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.

உலகிலுள்ள ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்களுக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவானால் இந்தத் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும். தடுப்பு மருந்து இன்றி இந்த வழிமுறை மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அதற்குக் குறைந்தபட்சம் ஒரு சில ஆண்டுகள் ஆகும்.

இந்தத் தொற்று ஹெச்.ஐ.வி. போல சமூகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடும் இடர் உள்ளது. இருப்பினும், உரிய சிகிச்சை மூலம் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் நீண்ட நாள்கள் நலமுடன் வாழவைக்க முடியும்.

இந்தத் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றைப் போதுமான அளவு உற்பத்திசெய்து உலகம் முழுவதும் தடுப்பு மருந்தை அனுப்பக் கடுமையான உழைப்பும் தேவை. இதில் நாம் ஏகப்பட்ட தடைகளையும் எதிர்கொள்ள நேரலாம்" என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைவர் மரியா வான் கெர்கோவ், "கரோனா தொற்று பரவல் காரணமாகப் பல நாடுகள் விரக்தியடைந்துவிட்டன. இருந்தாலும், சில நாடுகள் தொற்றை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொருளாதார மந்தநிலைக்குப் பின் கடும் சரிவை சந்தித்த பிரிட்டன் பொருளாதாரம்

ABOUT THE AUTHOR

...view details