தைவான், தென் கொரியா, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகள் கோவிட்-19 போரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். அந்த நாடுகள் ஊரடங்கை தளர்த்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், இதேவேளையில் வியட்நாம் இந்தப் போரில் வெற்றிபெற்றதைப் பற்றி யாரும் குறிப்பிட்டு பேசவில்லை.
வியட்நாமுக்கு முன்னதாக குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் கரோனா போரில் வென்றிருந்தாலும், அங்கே உயிரிழப்புகள் நேர்ந்தன. ஆனால், வியட்நாம் இதில் விதிவிலக்கு. இதுவரை அங்கு வைரஸ் தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த அதிசயத்தை கவனிக்க முடியாத அளவு உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மே 8ஆம் தேதி நிலவரப்படி வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில் 7,392, சிங்கப்பூரில் 20, தைவானில் 6, தென் கொரியாவில் 256 ஆகும். வியட்நாமில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்குக் காரணம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதன் விவேகமும், தொலைநோக்கு பார்வையும் ஆகும்.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதும், அதை சீனா வைரஸ் என குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் வியட்நாமுக்கு சீனாவைப் பற்றி ஆரம்ப காலத்திலிருந்தே தெரியும். அது சீனாவுடனான போர் அவர்களுக்கு கற்றுத் தந்த பாடம். வியட்நாமைச் சேர்ந்த APT32 எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனம், சீனாவில் புதிய வைரஸ் பரவிவருவதை கண்டறிந்தது. இதனை அறிந்த வியட்நாம் அரசு, உடனடியாக சைபர் பாதுகாப்பு நிறுவனங்களை சீனாவின் அவசர நடவடிக்கை மற்றும் வூகான் நகராட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிட்டது.
அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான fireeye,இதுகுறித்த தகவலை வெளியிட்டது. 2012ஆம் ஆண்டு முதலே வியட்நாமின் APT32 சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், சீனா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி சார்ந்த நிறுவனங்களின் ரகசியத்தை அறிய அது செயல்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்கா போலவே வியட்நாமும் சமூக வலைதளங்களை கூர்ந்து கவனித்துவந்தது. 2019, நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சீனாவின் வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அது விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சீனாவிலுள்ள வியட்நாமைச் சேர்ந்த மாணவர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்களிடம் இதுபற்றி தகவல்களைப் பெற்ற வியட்நாம் அரசு, உடனடியாக செயலில் இறங்கியது.
சீனாவுடன் 1,281 கிமீ எல்லைப் பரப்பை பகிர்ந்துள்ள வியட்நாமில் கரோனா பரவத் தொடங்கியது. 2020 பிப்ரவரியில் வியட்நாம் அரசு இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க சிறப்பான உத்திகளை வகுத்தது. கம்யூனிச தேசமாக இருந்தாலும், தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் சில நடவடிக்கைகளை வியட்நாம் அரசு மேற்கொண்டது.
உலக நாடுகள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரே வியட்நாம் செயல்படத் தொடங்கியிருந்தது. பிப்ரவரி மாத தொடக்கம் முதலே அதன் விமான நிலையங்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டது. பயணிகள் தங்கள் பயண விவரம் மற்றும் முகவரியை விமான நிலைய அலுவர்களிடம் அளிக்க வேண்டும். 38 டிகிரி செல்சியஸ்க்கு அதிமாக உடலின் வெப்ப நிலை இருக்கும் நபர்கள், அருகிலிருக்கும் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, உணவு விடுதிகள், வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மக்கள் கூட்டம் சேரும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனிங் வசதி செய்யப்பட்டது. மே 8ஆம் தேதிக்குள் 2,61,004 கோவிட்-19 பரிசோதனைகளை வியட்நாம் அரசு மேற்கொண்டிருந்தது. ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் வசித்துவந்த பகுதியை சீல் வைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அரசாங்கம். இதன் காரணமாக 9 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில், இதுவரை 288 நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று உள்ளது.
சீனா அல்லது பிற நாடுகளிடம் சோதனை கருவிகளுக்காக கையேந்தி நிற்காமல், தங்கள் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களை பயன்படுத்தி சொந்தமாக சோதனை கருவிகளை தயாரித்துக் கொண்டது வியட்நாம். இந்த சோதனைக் கருவியின் மதிப்பு 25 அமெரிக்க டாலர்கள், இதன்மூலம் ஒன்றரை மணி நேரத்தில் சோதனை முடிவுகளை அறியமுடியும். கரோனாவுக்கு எதிரான போரில் வியட்நாம் வெற்றிபெற இது முக்கிய காரணமாகும்.
பிப்ரவரி 2ஆது வார தொடக்கம் முதலே, வெளிநாட்டிலிருந்து திரும்பும் வியட்நாம் மக்களை 14 நாள் தனிமைப்படுத்தி வைத்திருந்தது வியட்நாம் அரசு. தனிமைப்படுத்தும் பணியை தாமதப்படுத்திய நாடுகள், அதற்கான பெரும் விலையை கொடுக்க நேர்ந்ததை நாம் கண்கூடாக காண்கிறோம். மார்ச் மாதம் முதல் குறிப்பிட்ட நகரங்களில் ஊரடங்கை அறிவித்து, விரைவாக செயல்படத் தொடங்கியது வியட்நாம் அரசு. பிரதமர் முதல் அரசியல் தலைவர்கள் பலரும் கரோனா விழிப்புணர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இப்படி ஒவ்வொரு நடவடிக்கையையும், விரைவாக செயல்படுத்தியதன் காரணமாகவே இந்தக் கரோனா போரில் மாபெரும் வெற்றியைக் கண்டிருக்கிறது வியட்நாம்...
இதையும் படிங்க:கரோனா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியா போஸ்ட்!