பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடந்த பிரிட்டனில் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதிலிருந்தே, வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தன.
650 இடங்களில் 362 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். தொழிலாளர் கட்சி 203 இடங்களை கைப்பற்றியதன் மூலம் படுதோல்வி அடைந்துள்ளது. பாரம்பரிய தொழிலாளர் கட்சியின் தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காகதான் இந்த முடிவை மக்கள் அளித்துள்ளனர் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக எதிர்கால தேர்தல்களில் தொழிலாளர் கட்சியை தலைமை தாங்க மாட்டேன் என அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜெரிமி கார்பின் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், "தேர்தலில் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துகள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, அமெரிக்காவும் பிரிட்டனும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட எந்த தடையில் இல்லை. பெரிய ஒப்பந்தமான இது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தைவிட அதிக லாபம் தரும். கொண்டாடுங்கள் போரிஸ்!" என பதவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலிபான்களுடனான பேச்சு பலன் தராது! - அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்