கீவ்:பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல அரசு இணையதளங்கள் செயல்படவில்லை என அந்நாட்டு அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒலேக் நிகோலென்கோ இன்று (ஜனவரி 14) ஃபேஸ்புக் பக்கத்தில், "பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணையதளங்கள், அரசின் பல முகமைகள் (ஏஜென்சிஸ்) தற்காலிகமாகச் செயலிழந்தன. எங்களுடைய வல்லுநர்கள் அதனை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உக்ரைன்ஸ்கயா பிரவ்டா செய்தித்தாளில், 'நாட்டின் அமைச்சரவை, ஏழு அமைச்சகங்கள், கருவூலம், தேசிய அவசர சேவை, மாநில சேவைகள் ஆகியவற்றின் இணையதளங்கள் ஹேக்கிங் தாக்குதலால் செயல்படவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.