கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான பிரிட்டனில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமை அரசியல் ஆலோசகரான டாமினிங் கம்மிங்ஸ், ஊரடங்கு விதிகளை மீறி கரோனா அறிகுறியுடைய தனது மனைவியுடன் லண்டனிலிருந்து 418 கி.மீ., பயணித்து அந்நாட்டு வடகிழக்குப் பகுதியில் உள்ள கவுன்டி துர்ஹாம் என்ற பகுதிக்குச் சென்றார்.
இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. டாமினிக் தனது தவறை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களே வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, டாமினிக்கை ஆதரித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "டாமினிக்கு வேறு வழி தெரியவில்லை. மனைவி குழந்தைகளின் நிலையை உணர்ந்தே அவர் இவ்வாறு செய்துள்ளார். அந்த வகையில் பார்த்தால், அவர் பொறுப்புடனும், சட்டத்துக்குட்பட்டே செயல்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதனால் பிரதமர் போரில் ஜான்சன் மீதும் அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. ஊரடங்கை படிப்படியாக தளர்த்த பிரிட்டன் அரசு திட்டமிட்டு வரும் வேளையில், இந்த சர்ச்சை அத்திட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.