உலகையை மிரட்டிவரும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க அமெரிக்க, ஜெர்மன் உள்ளிட்ட முன்னணி நாடுகள் முனைப்போடு செயல்பட்டுவருகின்றனர். இச்சூழலில், மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய டெக்ஸாமெத்தசோன் என்னும் ஸ்டீராய்டு மருந்தின் மூலம் கரோனா இறப்பு விகித்ததைக் குறைக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இதனால் இறப்பு விகிதம் குறைவதாகவும் பிரிட்டன் தேசியச் சுகாதாரச் சேவை நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இதனைப் பயன்படுத்தி வென்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களையும் மீட்கலாம் என்பதால், கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினரும், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களில் 35 விழுக்காட்டினரும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதனை உலகச் சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.