கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில், அதை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
இதை சமாளிக்க ஒவ்வொரு நாடும் பல முறைகளை கையாண்டுவருகிறது. அதன்படி பிரிட்டன் அரசு கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தை நிர்வகிக்க அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையில் நாடாளுமன்ற துணை செயலாளராக நாதிம் ஜஹாவியை நியமிக்க ராணி ஒப்புதல் அளித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதிம் ஜஹாவி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மிகப் பெரிய சவால் நிறைந்த ஒரு பொறுப்பு. விரைவாக தடுப்பு மருந்தை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் மீண்டும் பிரிட்டனை கட்டியமைக்க முடியும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கரோனா தடுப்பு மருந்தின் 40 லட்சம் டோஸ்கள் வரும் டிசம்பர் இறுதிக்குள் அவசர அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மார்ச் இறுதிக்குள் சுமார் நான்கு கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் இதுவரை 15.89 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 66,713 பேர் உயிரிழந்துள்ளனர்
இதையும் படிங்க:பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இணையும் மூன்று முக்கிய நபர்கள்!