அங்காரா:தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகின்றனர். பலர் ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ஆப்கனியர்களுக்கு புகலிடம் அளிக்கும் பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என துருக்கி பிரதமர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரிவரும் அகதிகளின் கிடங்காக துருக்கி நாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"லட்சக்கணக்கான ஆப்கனிய மக்கள் ஐரோப்பியா ஒன்றியம் செல்ல முயற்சிக்கும் வேளையில், தங்களுடைய நாட்டு மக்களின் நலனுக்காக எல்லைகளை மூடி ஐரோப்பிய யூனியன் தப்பிக்க முடியாது. அவ்வறு செய்வது, ஐரோப்பிய ஒன்றியம் தனது மனித உரிமை விழுமியங்களில் இருந்து பின்வாங்குவதைக் குறிக்கும்" எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.
3.6 மில்லியன் சிரியா மக்கள், 3 லட்சம் ஆப்கானியர்கள் என மொத்தம் 3.7 மில்லியன் மக்கள் துருக்கியில் அகதிகளாக உள்ளனர். உலகிலேயே அதிக அகதிகள் உள்ள நாடாக துருக்கி உள்ளது.
மீண்டும் 2015 சூழ்நிலை
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, ஐரோப்பிய யூனியனில் தஞ்சம் கேட்டு ஏராளமான சிரிய மக்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு, தங்குமிடம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க 2015ஆம் ஆண்டு துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு 7.03 பில்லியன் டாலர்களையும் துருக்கி அரசாங்கத்திற்கு வழங்கியது.
இந்த ஒப்பந்ததிற்குப் பின்பு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் புகலிடும் கோருவோர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
2015ஆம் ஆண்டு பல சிரிய மக்கள் ஐரோப்பிய யூனியனில் தஞ்சமடைய ஆபத்தான கடலைக் கடந்துவந்தனர். தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடும் என ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் அஞ்சுகின்றன. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில், அகதிகள் பிரச்னை அரசியல் தளத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.
2015ஆம் ஆண்டு ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் சிரிய அகதிகளுக்காக எல்லைகளை திறந்துவிட்டார். இதற்கு, அந்நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.