உலகையே சூறையாடி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ஐரோப்பிய நாடுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதில் நெதர்லாந்து ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளை எரிச்சலூட்டும் அளவுக்குக் கூச்சலும் கும்மாளமுமாய் வீதிகளில் வலம்வரும் சுற்றுலா பயணிகள் ஒருவரையும் தற்போது காணமுடிவதில்லை.
கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு கோடி சுற்றலாப் பயணிகளைக் கண்ட நெதர்லாந்தில் ஏற்பட்டுள்ள, இந்த திடீர் மாற்றம் அங்குள்ள சுற்றுலாத் துறையினரை திக்குமுக்காடச் செய்துள்ளது.
கரோனா பேரிடரைத் தொடர்ந்து, நெதர்லாந்து சுற்றுலாத் துறை என்னென்ன மாற்றங்களைக் காணப்போகிறது என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்துள்ளது.
கரோனா பேரிடர் நெதர்லாந்தைத் தாக்குவதற்கு முன்பே, கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு சுற்றுலாத் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.
ஆம்ஸ்டர்டாமில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அந்நகரைச் சுற்றியுள்ள சிறு சிறு நகரங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளைத் திசை திருப்பும் நோக்கில், 'ஆம்ஸ்டர்டாம் அண்ட் பார்ட்னர்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் புதிய மார்க்கெட்டிங் யுத்திகளை உருவாக்கி வருகிறது.