69ஆவது உலக அழகி போட்டி லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு, ஜமைக்கா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்த இறுதிச்சுற்றில் ஜமைக்காவைச் சேர்ந்த டோனி அன் சிங் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2018ஆம் ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார். இறுதிச்சுற்றில் பிரான்சின் ஓஸ்லி மெசினோ, இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோருடன் போட்டியிட்டார் டோனி அன் சிங்.
பிகினியில் ஹாயாக நடந்த உலக அழகிகள்!
23 வயதான டோனி அன் சிங், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் மகளிர் மற்றும் உளவியல் துறைசார் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அழகி பட்டத்தை வென்ற நான்காவது ஜமைக்கா பெண்ணான டோனி அன் சிங், தனது வாழ்க்கையில் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
தனது கனவுகளை அடைவதற்கு உந்துசக்தியாக உள்ள தனது தாய், தனது வாழ்வின் முக்கியப் பங்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வெற்றி உலகிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக அழகி 2019: மகுடம் சூடினார் ஜமைக்காவின் டோனி அன் சிங்