பாலியல் ஈர்ப்பு (sexual orientation), பாலியல் அடையாளம் (sexual identity) குறித்த காரணங்களுக்காகக் காட்டப்படும் பாகுபாட்டை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் விதமான தனி சட்டத்தை இயற்ற சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
இனம், மதம் சார்ந்த பாகுபாடு என்பது சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே சட்டவிரோதமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் பாலியல் ஈர்ப்பு குறித்தான விஷயங்களுக்காக பல இடங்களில் பாகுபாடு காட்டப்பட்டு, அதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக அந்நாட்டில் எவ்வித சட்டமும் இல்லாமல் இருக்கிறது.
இவர்கள் தொடர்ந்து பல இடங்களில் தங்களது பாலியல் ஈர்ப்புக்காகவும், அடையாளத்துக்காகவும் இன்னலுற்று வருகின்றனர். இதனைப் போக்க வேண்டுமென்றால், பாலியல் ஈர்ப்பை வைத்து பாகுபாடு காட்டுவோருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும். அதன்மூலம் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கும்.
ஏற்கனவே, தன்பால் ஈர்ப்பில் இருப்போருக்கு ஆதரவாகவும், அவர்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவும் சிறப்பு சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ஆனால் இதுபோன்ற உறவுகளில் இருக்கும் நபர்களுக்கெதிராக காட்டப்படும் பாகுபாடு, அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு எதிராக எந்த தண்டனைச் சட்டமும் இல்லை. இந்த பாகுபாட்டை களையவே இன்று இந்த வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வாக்கெடுப்பை சில வலதுசாரி இயக்கங்களும், மத குழுக்களும் எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘என்னால் காத்திருக்க முடியாது’ - பில்கேட்ஸ் மகள்