சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பூங்காவனது கரோனா பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு சனிக்கிழமை புலி தாக்கியதில் பெண் விலங்கு காப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.
சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் விலங்கு காப்பாளர் ஒருவரைக் கூண்டுக்குள் இருந்த புலி தாக்கியதைக் கண்ட பார்வையாளர்கள் உடனடியாக எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த பூங்கா அலுவலர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அவரை மீட்க முடியாமல் போனது.
புலி உள்ளிருக்கும்போது ஏன் விலங்கு பாதுகாவலர் உள்ளே சென்று தன்னைத்தானே பூட்டிக்கொண்டார் என்பது தெரியவில்லை என சூரிச் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய சூரிச் உயிரியல் பூங்காவின் இயக்குநர் செவெரின் டிரஸ்ஸன், “சைபிரியா புலி ஐரினா 2015ஆம் ஆண்டு பிறந்தது. டேனிஸ் நகர் பூங்காவிலிருந்து புலி கடந்தாண்டுதான் சூரிச் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
ஐரினா சாதாரண குணாதிசயம் கொண்டதுதான். உயிரிழந்த பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அச்சம்பவத்தை நேரில் பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஹாங் காங்: ஜனநாயக சார்பு புத்தகங்களுக்கு தடை