சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி கிரெட்டா தன்பெர்க். தன் வயதையொத்த பெண்கள் டேட்டிங், கேளிக்கை என கழிக்க, இவரோ பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் பேரணிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.
மாணவி டூ போராளி
சில ஆண்டுகளுக்கு முன் ஜெனிஃபர் மோராஷ், அவரது ஒன்பது வயது சிறுமியைப் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நம்மால் பூமி படும்பாட்டையும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் அபாயம் குறித்த செய்திகளும் அந்த ஒன்பது வயது சிறுமியை பல நாட்கள் உறங்கவிடாமல் தடுத்தது.
காலங்கள் ஓடின, தனது கண்முன்னே பல இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைக் கண்டு வேதனை கொண்டார் அவர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தார். தனது 16 வயதில் பள்ளிப் படிப்பைத் தூக்கி எறிந்தவர், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் போராடத் தொடங்கினார்.
ஒற்றை ஆளாகப் களத்தில் நிற்கும் கிரெட்டா தன்பெர்க் மாணவி நிகழ்த்திய புரட்சி போராட்டம்!
2018ஆம் ஆண்டு ஒற்றை ஆளாகச் சுவீடன் நாடாளுமன்றம் முன் 'School strike for climate' என்ற பதாகையுடன் ஒற்றை ஆளாகத் தனது போராட்டத்தைத் தொடங்கிய அவரது பின்னால், இப்போது ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறை மாணவ மாணவியர் போராடக் காத்திருக்கின்றனர்.
உலகில் தற்போதைய வெப்பநிலையை 1.5°C வரை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வகுப்புகளைப் புறக்கணித்து Friday For Future என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகிறார் இந்தக் குட்டிப்போராளி கிரெட்டா தன்பெர்க்.
மனிதகுலத்துக்கு அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தும் தோல்வி
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, "2030ஆம் ஆண்டுகள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியாகும் கார்பனை பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைப் போல குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது மனித குல வரலாற்றுக்கு அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தும் மாபெரும் தோல்வியாக இருக்கும்" என்று அவர் ஐரோப்பியப் பொருளாதார - சமூக குழுவில் முழங்கிய முழக்கம் ஐரோப்பிய முழுக்க எதிரொலித்தது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர், "நீங்கள் எங்கள் எதிர்காலத்தைச் சுரண்டி விட்டீர்கள், இந்த பூமி வீடு தீப்பிடித்து இருப்பதை நீங்கள் யாரும் உணரவில்லை, இதைப் பற்றிப் பேச யாரும் முன்வரவில்லை. நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்க வரவில்லை, நீங்கள் இதைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் இனி நாங்கள் விடுவதாக இல்லை" என அழகான பிஞ்சு குரலால் எச்சரித்தது, அனைத்து தலைவர்களின் நெஞ்சையும் உறுத்தியிருக்கும்.
கிரெட்டா தன்பெர்க் விளைவு
உல்லாசமாக இருந்துவரும் பல லட்சம் மாணவ மாணவியருக்குப் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் வாழவிருக்கும் பூமிக்காகப் போராடவைத்தவர் கிரெட்டா தன்பெர்க்.
இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவ், "நான் உங்கள் பேச்சைக் கேட்டபோது, என்னுடைய பொறுப்பை உணர்ந்தேன். உங்கள் பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்த என்னை குற்ற உணர்ச்சியடைய வைத்துவிட்டீர்கள். காலநிலை மாற்றம் குறித்து போதுமான அளவு நான் பேசவில்லை என்பதை உணர்கிறேன்" என்றார்.
இவரது போராட்டங்களுக்குப் பின், 2019ஆம் ஆண்டில் காலநிலை குறித்து குழந்தை பத்திரிகைகளில் வரும் செய்தி இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
விமான பயணங்கள் மூலம் வெளியாகும் கார்பன் குறித்து இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுகளின் விளைவால் சுமார் பத்து விழுக்காடுவரை ரயில் போக்குவரத்து உயர்ந்துள்ளது. இதை வல்லுநர்கள் பலரும் அவரது பெயரைக்கொண்டு 'கிரெட்டா தன்பெர்க் விளைவு' என்றே அழைக்கின்றனர்.
பூமியைக் காக்க சூப்பர்மேன்களும் ஸ்பைடர்மேன்களும் தேவையில்லை. தான் வாழும் பூமியின் மீது ஒவ்வொரு மனிதனும் காதல் கொண்டாலே போதும் என்று உலகத்திற்கு பறைசாற்றியிருக்கிறார் இந்த இளம் போராளி கிரெட்டா தன்பெர்க். இந்தப் பூவுலகை காக்க கிரெட்டா தன்பெர்க்குடன் கைகோர்த்து ஒன்றாகப் போராட நாமும் தயாராவோம்!