சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் (தீநுண்மி), கட்டுக்கடங்காமல் பரவி உலகையே ஆட்கொண்டுவருகிறது. இந்தத் தீநுண்மி காரணமாக உலகளவில் இதுவரை 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பால்கன் நாடுகளில் ஒன்றான போஸ்னியாவில் லுக்கோமிர் என்ற மலைக் கிராமத்தில் வாழும் மக்கள் கரோனாவைப் பற்றி துளியும் கவலைப்படாமல் எப்போதும் போல வாழ்ந்துவருகின்றனர்.
ஜெலாஸ்னிகா மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை.
இங்கு வாழ்ந்துவரும் விஜ்சில் கோமர் என்ற 83 வயது மூதாட்டி பேசுகையில், "இங்கு கரோனா என்பதே கிடையாது. முகக்கவசம், கையுறை என எதையும் அணியாமல் நாங்கள் இங்குச் சுதந்திரமாகச் சுற்றிவருகிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.