தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இனவெறிக்கு எதிரான போராட்டம் - இத்தாலியில் சேதப்படுத்தப்பட்ட ஊடகவியலாளரின் சிலை - இனவெறிக்கு எதிரான போராட்டங்கள்

ரோம்: இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுவரும் நிலையில், 12 வயது சிறுமியை பணம் கொடுத்து வாங்கி திருமணம் செய்துகொண்ட பிரபல ஊடகவியலாளரின் சிலை இத்தாலியில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Statue of Italian journalist Indro Montanelli vandalised
Statue of Italian journalist Indro Montanelli vandalised

By

Published : Jun 15, 2020, 6:18 PM IST

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் மட்டுமின்றி, அனைத்து விதமான ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டங்களும் வலுபெற்றுள்ளது.

இந்நிலையில், இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஒரு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த இந்திரோ மொண்டனெல்லி என்ற ஊடகவியலாளரின் சிலையின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு பெயிண்டை ஊற்றி சேதப்படுத்தினர்.

2001-இல் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த இந்திரோ மொண்டனெல்லி, 20ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த மிக முக்கிய ஊடகவியலாளராக இருந்தார். "மொண்டனெல்லி தனது வாழ்கையின் இறுதி நாள்கள் வரை எத்தியோப்பிய நாட்டிலிருந்து தான் 12 வயது குழந்தையை பணம் கொடுத்து வாங்கி திருமணம் செய்துகொண்டது குறித்தும், அந்த சிறுமியை பாலியல் அடிமையாக மாற்றியது குறித்தும் பெருமையாக கூறிவந்தார்.

எனவே, அவரது பெயரிலுள்ள பூங்காவும் அவரது சிலையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்" என பாசிச எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்றான சென்டினெல்லி என்ற அமைப்பு மிலன் நகர மேயரிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

இந்த சூழ்நிலையில்தான் மொண்டனெல்லியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு ரெட் ஸ்டுடென்ட்டி மிலானோ என்ற மற்றொரு பாசிச எதிர்ப்பு இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அடிமைத்தனத்தை ஆதரித்த ஒரு காலனியாதிக்கவாதியின் சிலையை பொது இடத்தில் வைத்து கொண்டாடக் கூடாது என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மிலன் நகரத்தின் மேயர் கியூசெப் சலா அந்த சிலை அதே இடத்தில்தான் இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், "அவர் ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவாக போராடிய மிக முக்கிய ஊடகவியலாளர். நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் எந்தவித தவறுகளையும் செய்யவில்லை என்று உறுதியாக கூறமுடியுமா?" என்று தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே இனவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் சேதப்படுத்தப்பட்ட முதல் சிலையாக இந்திரோ மொண்டனெல்லி சிலை உள்ளது.

கடந்த ஆண்டு பெண்ணியவாதிகளால் நடத்தப்பட்ட பேரணியின்போதும் இந்திரோ மொண்டனெல்லியின் சிலையின் மீது பிங்க் நிற பெயிண்ட் ஊற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்தை முன்னிட்டு காந்தி, மண்டேலா சிலைகள் மூடல்!

ABOUT THE AUTHOR

...view details