அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்றப்பின் முதன்முறையாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினை வரும் ஜூன் 16ஆம் தேதி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, கோவிட்-19 தொற்று, ஆயுத கட்டுப்பாடு, பயங்கரவாத தடுப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசவுள்ளனர்.
ரஷ்யா, அமெரிக்கா உறவு சீராகும் - விளாதிமிர் புதின் நம்பிக்கை - அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
ஜோ பைடனுடனான சந்திப்பு அமெரிக்க-ரஷ்ய உறவை சீராக்கும் என நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசியுள்ளார். "ஒரு கட்டத்தில் ரஷ்யா - அமெரிக்கா உறவு என்பது அமெரிக்க உள்நாட்டு அரசியலின் பிணைக்கைதியாக மாறிய நிலையில், இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுடனான சந்திப்பு அதற்கு நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம், மனித உரிமை விவகாரம், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் ரஷ்யா-அமெரிக்கா இடையே உரசல் போக்கு நிலவி வருகிறது. இதன் பின்னணில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பானது அனைவராலும் கூர்ந்து நோக்கப்படுகிறது.