மாஸ்கோ:உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூறிய அவர், "இன்றைய நாளின் பிற்பகுதியில், அதாவது மாலை நேரத்தில் எங்களின் பேச்சுவார்த்தைக்குழு உக்ரைனிய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேச்சுவார்த்தை எங்கு வைத்து நடைபெற உள்ளது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
முன்னதாக, ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் கடந்த ஞாயிற்றுகிழமை (பிப். 27) பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் இதுதொடர்பாக எந்தப் பதிலும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார்கீவ்வில் இருந்து உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு