கரோனா தடுப்பூசி சோதனையில் உலக நாடுகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனைச் சாத்தியமாக்குவதில் ரஷ்யா தீவிரமாகப் பயணித்துவருகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்த கமேலியா நிறுவனம் கரோனா தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் தடுப்பூசிக்கான அனைத்துக் கட்ட சோதனைகளையும் நிறைவுசெய்துள்ளதாகவும், இறுதி ஒப்புதலைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தினர் பலர் சோதனை முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பரிசோதனைக்கு உட்பட்ட ராணுவத்தினர் நலமாக உள்ளதாகக் கூறியுள்ள ராணுவ அமைச்சகம், அவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும், வரும் அக்டோபருக்குள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தன் பின்னர், முதற்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியர்களுக்குச் செலுத்தப்படும் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்தக் கூற்றுகளை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஐயத்துடனே பார்க்கின்றன. பாதுகாப்பு அம்சங்கள் காரணகமாக ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் தடுப்பூசியை அமெரிக்கா பயன்படுத்தப்போவதில்லை என அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணர் அந்தோனி பௌசி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க:பெய்ரூட் விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் - ட்ரம்ப்