பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்தும், ஊரடங்கில் விதிக்கப்படவுள்ள தளர்வுகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரும் ஜூன் மாதம் முதல் பிரிட்டனில் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் திறக்கபடவுள்ளன என்றார். இதற்காக நிபந்தனை திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக நாடுகளில் மிகப்பெரியதான பிரிட்டனில் மக்கள் வேலையிழந்தும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளிலேயே முடங்கியிருப்பதும் கவலையளிக்கிறது என்ற அவர் ஊரடங்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல என்றபோதிலும், நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை நிபந்தனைகளுடன் அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்த தகவல்களை ஐம்பது பக்க அளவில் வெளியிட்ட அரசு, மக்கள் முகக் கவசங்களை கட்டாயம் அணியவேண்டும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும், தகுந்த இடைவெளிகளை கடைபிடிப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஊரடங்கை தளர்த்துவது குறித்து பேசிய அவர், பிரிட்டனில் மூன்று கட்டங்களாக ஊரடங்கினை தளர்த்தவிருப்பதாகவும், முதல்கட்டமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள், கடைகள் உள்ளிட்டவை படிப்படியாக திறக்கப்படும். மக்கள் அதிகளவில் கூடும் சில முக்கிய இடங்கள் திறக்கப்படும், பூங்கா, கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார். மேலும், கோல்ஃப் மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை எனில், ஜூலை மாதத்தில் படிப்படியாக உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், பார்கள், முடி திருத்தும் நிலையங்கள், அத்தியாவசிய தேவைகளின்றி செயல்படும் பிற வணிக நிறுவனங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேசமயம், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஊரடங்கு தளர்வின் போது அதிகரித்தால் அனைத்து தளர்வுகளும் முற்றிலுமாக நீக்கப்படும் எனவும் கூறினார்.