தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஏப்ரல் 17ஆம் தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு - இளவரசர் பிலிப்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. அப்போது நாடு தழுவிய மவுன அஞ்சலியும் கடைபிடிக்கப்பட உள்ளது.

Prince Philip
Prince Philip

By

Published : Apr 11, 2021, 1:45 PM IST

Updated : Apr 11, 2021, 2:02 PM IST

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் ஏப்ரல் 17ஆம் தேதி விண்ட்சரில் நடைபெறும் என்றும், அவரது உடல் பொது ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட மாட்டாது என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு, அவரது விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில், அரச இறுதி சடங்காக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இளவரசர் பிலிப்

நாடு தழுவிய மவுன அஞ்சலி

வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி, 3 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்க உள்ளது அப்போது நாடு தழுவிய மவுன அஞ்சலியும் கடைபிடிக்கப்பட உள்ளது.

மேலும், இறுதிச் சடங்கு நாளான ஏப்ரல் 17ஆம் தேதியோடு முடிவடையும் வகையில் எட்டு நாள்களுக்கு நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டு பிரதமரின் பரிந்துரைக்கு ராணி எலிசெபத் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அரச குடும்பம் இரண்டு வாரங்கள் வரை துக்கம் அனுசரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் இளவரசர் பிலிப்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

கரோனா பரவல் காரணமாக இறுதிச்சடங்கில் பங்கேற்க மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 99ஆவது வயதில் ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்த இளவரசர் பிலிப்பின் நினைவாக, முன்னதாக பிரிட்டன் முழுவதும் நிலத்திலும் கடலிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

குடும்பத்தினருடன் இளவரசர் பிலிப்

மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி அரச இல்லங்களில் அவற்றை விட்டுச்செல்ல வேண்டாம் என்றும், மலர் அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இளம்பருவம்

இளம் வயதில் இளவரசர் பிலிப்

இங்கிலாந்து இளவரசர் பிலிப், 1921ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி கிரேக்க நாட்டில் உள்ள கோர்ஃபூ எனும் தீவில் பிறந்தார். சிறு வயதில் தனது பாட்டியுடன் வசிக்கும் பொருட்டு 1928ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பிலிப், 1939ஆம் ஆண்டில் அங்குள்ள ராயல் கடற்படைக் கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றினார்.

இளவரசர் பிலிப் - ராணி எலெசெபத்

சில மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார் பிலிப். பின்னர் 1947ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, தனது 25ஆவது வயதில் எலிசபெத் ராணியாக மாறியபோது இந்த அரச தம்பதியினர் சர்வதேச கவனத்தை ஈர்த்தனர்.

ராணி எலிசெபத் - இளவரசர் பிலிப்

இவர்களின் 73 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இளவரசர் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் என நான்கு பிள்ளைகளும், எட்டு பேரப்பிள்ளைகளும், 10 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

கரோனா விதிமுறைகள் காரணமாக இறுதிச் சடங்கில் மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த இறுதி சடங்கில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவர் தனது இடத்தை அரச குடும்பத்தில் ஒருவருக்கு விட்டுக் கொடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’தடுப்பூசி விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு’ - டெட்ரோஸ் அதானோம் குற்றச்சாட்டு

Last Updated : Apr 11, 2021, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details