இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் 99 வயதில் காலமானார். இந்தத் தகவலை இங்கிலாந்து அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
அதில், ““ஆழ்ந்த துக்கத்தோடு, ராணி தனது அன்பான கணவர், பிரின்ஸ் பிலிப் எடின்பர்க் டியூக் இறந்ததை அறிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் பிலிப், 1921இல் டென்மார்க்கில் பிறந்தார். பின்னர் அவரின் பாட்டியுடன் வசிக்கும் பொருட்டு பிலிப் 1928இல் இங்கிலாந்து சென்றார். அங்கு, 1939 இல் ராயல் கடற்படைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் பிரிட்டனின் இராணுவத்தில் பணியாற்றினார்.
சில மாதங்களுக்குப் பிறகு, பிலிப் தனது வருங்கால மனைவியான இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அவர்கள் 1947 இல் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, பிலிப் தனது கிரேக்க மற்றும் டேனிஷ் அரச பட்டங்களை துறந்தார். தொடர்ந்து, தனது 25ஆவது வயதில் எலிசபெத் ராணியாக மாறியபோது அரச தம்பதியினர் சர்வதேச கவனத்தை ஈர்த்தனர்.
அவர்களின் 73 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், பிலிப் ராணியுடன் ஒரு நிலையான அங்கமாக இருந்தார். எப்போதும் அவரது பக்கத்திலேயே இருந்தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவர்கள், இளவரசர் சார்லஸ், இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆவார்கள்.
பிலிப் 2017 இல் பொது கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பொதுவில் அரிதாகவே தோன்றுவார். அவரது மிகச் சமீபத்திய பொது நிகழ்வு ஜூலை மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையில் இராணுவ விழா ஆகும். முன்னாள் கடற்படை அலுவலரும், போலோ வீரருமான பிலிப், வயதான காலத்திலும் வலுவான ஆரோக்கியத்துடன் திகழ்ந்தார்.
எனினும் சமீபத்தில் கோவிட் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். முன்னதாக 2011ஆம் ஆண்டு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 2017இல் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்திற்கு அருகே லேண்ட் ரோவர் ஓட்டும்போது விபத்தில் சிக்கினார். இதையடுத்து தனது 97 வயதில் வாகனம் ஓட்டுவதை நிறுத்தினார். இளவரசர் பிலிப் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.