ஏழு நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐநா பொதுச்சபையின் 74ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் நகரின் ஐநா தலைமையகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ப்பிற்கு பெரிய அளவிலான புகைப்படம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். ஹூஸ்டனில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பாக மேடையில் ட்ரம்ப்பும் - மோடியும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தைத் தான், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.