மனிதர்களைக் கைது செய்வது போல் நெதர்லாந்து காவல் துறை கிளியைக் கைது செய்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் உட்ரெக்ட் பகுதியில் உள்ள கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபருடன் கிளி ஒன்றையும் அந்நாட்டுக் காவல் துறை கைது செய்தது. பின்னர் மனிதர்களை அடைக்கும் சிறையில் கிளியையும் வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்நாட்டுக் காவல்துறை பதிவிட்டது.
இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "கொள்ளைச் சம்பவம் அரங்கேறியபோது கிளி கொள்ளையடித்தவரின் தோளில் அமர்ந்திருந்த காரணத்தினால்தான் கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் பறவைகளுக்காக தனித்துவமான கூண்டு தங்களிடம் இல்லாத காரணத்தினால் உரிமையாளருடன் வைக்க முடியவில்லை. அதனால் கிளியை தனி அறையில் வைத்துவிட்டு அதற்கான உணவு, தண்ணீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.