கரோனா பரவல் தொடங்கி ஓர் ஆண்டை நெருங்கும் நிலையிலும்கூட அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் தினசரி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக போலந்து வார்சாவிலுள்ள தேசிய மைதானத்தை கரோனா மருத்துவமனையாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் 58,500 இருக்கைகளைக் கொண்ட இந்த அரங்கம், யூரோ 2012 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த கட்டப்பட்டது. இந்த அரங்கு ஒரே நேரத்தில் 500 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் தேவைப்படும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.