பல மேற்கத்திய நாடுகளில் கருகலைப்பு அனுமதிக்கப்படுகிறது. பாலியல் வன்புணர்வு போன்ற காரணங்களால் பெண்கள் கருவுற்று இருந்தாலும் கரு குறைபாட்டுடன் இருப்பினும் கருகலைப்பிற்கு பல நாடுகளும் அனுமதியளித்துள்ளது.
போலாந்திலும் இச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தக் கருகலைப்பு சட்டத்திற்கு எதிராக போலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கருவின் குறைபாடுகள் காரணமாக கர்ப்பத்தை கலைப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் உயிரையும் பாதுகாக்கக் கோரும் போலாந்து நாட்டின் அரசியலமைப்பு விதியை மீறுவதாக உள்ளதாக வலதுசாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கருகலைப்பு சட்டம் விரோதமானது என்று தீர்பளித்தனர்.
நீதிமன்றத்தின் இந்த முடிவை கண்டித்து சுமார் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் வார்சாவில் உள்ள வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை காவல் துறையினர் கலைத்தனர். மேலும், போராட்டக்காரர்களில் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போலாந்து நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை ஆணையமும் கடுமையாக விமர்சித்துள்ளது. உடல்நலக் குறைபாடு இருக்கும் கருக்களை கலைக்க அனுமதி மறுப்பதன் மூலம் கருவுற்று இருக்கும் பெண்களின் உடல்நிலை ஆபத்தான கட்டத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக விமர்சித்துள்ளனர்.
முன்னதாக, போலாந்து நாட்டை ஆளும் வலதுசாரி அரசு தொடர்ந்து கருகலைப்பிற்கு தடை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா தொற்று பாதிப்புள்ள பாதிரியாருடன் உரையாடிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்!