பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.13,000 கோடி மோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த அந்நாட்டு காவல் துறையினர், கடந்தாண்டு கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மேலும், அவரை இந்தியா அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை ஜனவரியில் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதி சாமுவேல் கூஸ் அமர்வில் இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய அரசு தரப்பில், நீரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்குப் பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது. நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டார். எனவே, விரைவில் நீரவ் மோடி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!