அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர், காவலரின் பிடியில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் எதிரொலியாக அந்நாடு முழுவதும் இனவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்கள் பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
அந்த வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஓரியல் கல்லூரி அருகே நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி வாளகத்தில் பொறிக்கப்பட்டுள்ள சீசில் ரோட்ஸின் கல்வெட்டை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
விக்டோரியா காலணி ஆதிக்க காலத்தில் தொழிலதிபராக இருந்த சீசில் ரோட்ஸ், தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் ஆஃப் குட் ஹோப்பின் (அப்போது கேப் காலணி) பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக விளங்கிய ஒருவரின் கல்வெட்டு கல்லூரியில் பொறிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடான செயல் என ஒரு மாணவர் விமர்சித்தார்.