உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக மீண்டும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது உருமாறிய கோவிட்-19 தொற்றான ஒமைக்ரான். தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த தொற்று, மற்ற வகை தொற்றுகளை விட அதிக தீவிரம் மிக்கதாகக் கருதப்படுகிறது.
இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றில், மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்பைக் புரதம் (Spike Proteins) 30க்கும் மேல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
தென்னாப்ரிக்காவில் தீவிரம்
இந்த தொற்றால் தென்னாப்ரிக்கா பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றது. அந்நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துவருகிறது.
நேற்று ஒரேநாளில் மட்டும் 8,500 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னாப்ரிக்கா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தென்னாப்ரிக்காவுக்கு பயணத் தடை வித்துள்ளன.
ஐரோப்பாவில் அச்சம்
ஒமைக்ரான் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 15 நாள்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கோவிட் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் பதிவான மொத்த பாதிப்புகளில் 70 விழுக்காடு ஐரோப்பாவில் மட்டும் ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் ஐரோப்பாவில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தென்கொரியாவிலும் மோசம்
அதேபோல் தென்கொரிய நாட்டில் 5,200க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒமைக்ரான் அச்சம் காரணமாக, தென் கொரிய நாட்டிற்கு வருபவர்கள் அனைவரும் 10 நாள்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 32க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது.
ஒமைக்ரான் மிகவும் தீவிரமாகப் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அமைப்பைச் சேர்ந்த 194 நாடுகளும் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை, ஒமைக்ரான் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த நாடுகளும் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க:Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?