ஜெனீவா: தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் கண்டறியப்பட்டுவருகிறது. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகள் ஆகியவை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் நேற்று (டிசம்பர் 1) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "குறைந்தது 23 நாடுகளில், அதாவது உலக சுகாதார மையத்தின் ஆறில் ஐந்து பிராந்தியங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வந்ததில் ஆச்சரியமில்லை
அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு தொற்றின் வளர்ச்சியை மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கிறது. இதேபோன்று, அனைத்து நாடுகளும் தொற்றுத் தடுப்பில் தீவிரம் காட்ட வேண்டும்.
ஒமைக்ரான் தொற்று உருவானதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. வைரஸ் என்பது இதுபோன்றுதான் உருமாறும். ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகம் ஆய்வு செய்துவருகிறது. மேலும், ஒமைக்ரான் தொற்றின் நோய்ப் பரவுதல், அதன் தீவிரம், சோதனை செய்யும் முறைகள், ஒமைக்ரான் மீது தடுப்பூசிகளின் செயல்திறன் ஆகியவை குறித்து பல்வேறு தகவல்கள் இன்னும் அறிய வேண்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பல ஆலோசனைக் குழுக்கள் ஒன்றுகூடி, கடந்த சில நாள்களாக வந்த ஒமைக்ரானின் வளர்ச்சி குறித்த தரவுகளை மதிப்பிடுவதற்கும், தொற்று குறித்த அச்சங்களை நிவர்த்திசெய்வதற்குத் தேவையான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை (உலக சுகாதார அமைப்பின் தரவின் அடிப்படையில்)
1. போட்ஸ்வானா - 19
2. தென் ஆப்பிரிக்கா - 77
3. நைஜீரியா - 3
4. இங்கிலாந்து - 22
5. தென் கொரியா - 5
6. ஆஸ்திரேலியா - 7
7. ஆஸ்திரியா - 1
8. பெல்ஜியம் - 1