லண்டன்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த நிலையில், உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரவல் தீவிரமாக இருக்கும்
உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.