கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து, பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு பகலாக தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தையும் விட்டு வைக்காத வெள்ளம் இந்நிலையில், சமோசான் கிராமத்திற்கு அருகிலுள்ள லோசன்ட்ஸ் ஆற்றில் திடீரென பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில், லோசன்ட்ஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சுக்குநூறானது. மேலும், கட்டுக்கடங்காத வெள்ளத்தில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டது.
இது குறித்து சமோசான் கிராம காவல்துறையினர் கூறும்போது, ‘தொடர் கனமழையால் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 37 வயதான ஆணும், 6 வயதுள்ள பெண் குழந்தையும் இருந்தனர் எனக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் உதவியுடன் 70 பேர் கொண்ட குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.