45ஆவது ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பியாரிட்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், ஐநா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பையும் சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் சேர்ந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அனைத்துப் பிரச்னைகளும் இரதரப்புப் பிரச்னைகளாகும். இந்த பிரச்னைகளுக்கு மற்ற நாடுகளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
1947ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடு. அதனால் எங்களுக்குள் நிலவிவரும் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றபோது அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். மேலும், படிப்பறிவு, வறுமை, நோய், நாட்டின் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இருநாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்" என்றார்.
பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப் "காஷ்மீர் குறித்து பிரதமர் மோடியிடம் நேற்று இரவு பேசினேன். அங்கு நிலமை கட்டுக்குள் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். பாகிஸ்தானிடம் அவர்கள் (இந்தியா) பேசிவருகிறார்கள், இருவரும் நல்ல முடிவை எட்டுவார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரதமர் மோடியின் 'இருதரப்பு' நிலைபாட்டையே அதிபர் ட்ரம்ப்பும் உணர்த்துகிறார் என தெளிவாகியுள்ளது.