கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை இத்தாலியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இத்தாலி நாட்டில் தான். மூத்த பத்திரிக்கையாளர் சிமிதா சர்மா மின்னஞ்சல் வழியாக இத்தாலி நாட்டின் இந்தியத் தூதரர் வின்சன்சோ டி லூக்காவுடன் எடுத்த நேர்காணலில், பொது சுகாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் இணைந்து செயல்படவேண்டிய தேவையை இந்த கோவிட்-19 கொண்டுவந்துள்ளது எனவும் அதில் இத்தாலி தனது பங்கைச் செய்யும் எனவும் தெரிவித்தார்.
சீனா, கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 15 நாடுகளிலிருந்து உத்தியோகப்பூர்வமான, ராஜதந்திர, ஐ.நா, பன்னாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான பயணங்கள் நீங்கலாக மற்ற எல்லா பயணங்களுக்கான விசாவை இந்திய அரசு ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மார்ச் 15 முதல் 23ஆம் தேதி வரையில் ரோம் மற்றும் மிலன் பகுதிகளுக்கான விமான சேவையை ரத்து செய்வதாகவும் நேற்று அறிவித்துவிட்டது.
மின்னஞ்சல் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இங்கே..
கேள்வி: இத்தாலியில் இப்பொழுது நிலமை எவ்வாறாக இருக்கிறது? கொரோனா தொற்று குறித்த தகவல்களைப் பார்க்கும்போது இத்தாலியிலும் ஜப்பானிலும் நிலமை மோசமாகியுள்ளது போல் தெரிகிறதே?
பதில்:இத்தாலிய அரசாங்கம் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளிப்படைத்தன்மையுடன் உலக நாடுகளுடன் பகிர்ந்து வருகிறது. இத்தாலிய சிவில் பாதுகாப்புத் துறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்களை தினந்தோறும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது. முதலில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுத்த கோடோக்னோ நகரில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கட்டுப்பாடு நடவடிக்கைகளை தற்போது நாடுமுழுவதும் எடுத்துவருகிறோம். உலக சுகாதார நிறுவனத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் முறையாக பதிலளித்துவருகிறோம். இது இத்தாலியில் மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சனையல்ல. உலகளவில் எதிர்கொண்டுள்ள பிரச்னையில் இத்தாலி தனது பங்கை செய்து வருகிறது.
கேள்வி:கொரோனா தொற்றை கண்டறிய போதுமான ஆய்வகங்களும், குணப்படுத்துவதற்கு போதுமான மருத்துவ வசதிகளும் தற்போது உள்ளனவா?
பதில்: மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை மக்களுக்கு கொடுக்கும் நாடுகளில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இத்தாலி உள்ளது. ஆய்வகங்கள் மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை இரவு பகலாக அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. அதிக ஆயுள்காலம் கொண்ட நாடுகளில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியனில் ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 64.2 ஆண்டுகளாகவும் பெண்களின் ஆயுள்காலம் 63.5 ஆண்டுகளாகவும் உள்ளது. குறிப்பாக இத்தாலியில், ஆண்களுக்கு 67.6 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 67.2 ஆண்டுகளாகவும் உள்ளது. இத்தாலி அரசாங்கம் தனது மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட இலவச மருத்துவ வசதிகளை செய்துகொடுப்பதில் பெருமைகொள்கிறது.