உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. கரோனா வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை 4.5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்னர்.
உலக சுகாதார அமைப்பு கரோனாவை உலக பெருந்தொற்றாக அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தற்போது லாக் டவுன் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் வெறும் லாக் டவுன் திட்டம் மட்டும் கரோனாவைக் கட்டுப்படுத்த பயன்படாது என அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் தொடர்ச்சியான வழிகாட்டுதல் உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி நேற்று முக்கிய தகவல்களை அளித்த அந்த அமைப்பு, 'உலகில் 150 நாடுகளில் 100க்கும் குறைவான கரோனா பாதிப்பு உள்ள நிலையில், அந்நாடுகள் கரோனா பாதிப்பை முளையிலேயே கட்டுப்படுத்த தயார் செய்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
லாக் டவுன் அறிவித்துள்ள பெரிய நாடுகள் மக்கள் நடமாட்டமில்லாத இந்தக் காலத்தை சரியாக பயன்படுத்தி அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டு வைரஸ் பாதித்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வைரசை முற்றிலும் அகற்ற தீவிரமாக பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் லாக் டவுன் நடவடிக்கை பயனற்றுபோகும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வரை கரோனா பரிசோதனை எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளன. தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகளவில் பரிசோதனை செய்து உயிரிழப்பை பெருமளவில் குறைத்துள்ளன. ஆனால் தற்போது வரை நாளொன்று ஆயிரத்து 500க்கும் குறைவான பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களில் பரிசோதனை உபகரணங்கள் தயாரிப்பதை அதிகரித்து, பரிசோதனை மையங்களும் புதிதாக அறிவிக்கப்பட்டுவருகின்றன. வரும் நாட்களில் வாரத்திற்கு 10 லட்சம் பரிசோதனை செய்யுமளவிற்கு தயார்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க:கோவிட் - 19: பரபரப்பான சூழலில் ஜி-20 நாடுகள் இன்று ஆலோசனை