பெலாரஸ்:உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது. இரு நாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகின்றன. நாளுக்கு நாள் போர் பதற்றம் தீவிரமடையும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் 198 உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்கள் 4300-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
கிரெம்ளின் மாளிகையின் அறிவிப்பு
இந்நிலையில், உக்ரைனுடன் பெலாரஸின் கோமெல் (Gomel) நகரில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யத் தயாராக உள்ளது என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் இன்று (பிப்.27) அறிவிப்பு வெளியிட்டது. பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உயர் அலுவலர்கள் அங்கு தயாராக உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நகரங்களில் என்றால் சம்மதம்
இதையடுத்து, உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது வீடியோ உரையில், "ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க முடியாது. இந்தத் தாக்குதலில் பெலாரஸ் ரஷ்யாவுக்கு உடந்தையாக இருக்கிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்" என்றார்.
மேலும், போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா ஆகிய இந்த நகரில் ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று ரஷ்யா உக்ரைனை முதல்முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்தநிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிபந்தனையை முன்வைத்து, நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இதுதான் எனக் கூறி, நகரங்களின் பட்டியலைக் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: புறப்பட்டது நான்காவது விமானம்: உக்ரைனில் சிக்கிக்கொண்ட 198 இந்தியர்கள் பாதுகாப்பாக புறப்பட்டனர்